பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான நிக் ஆட்ர்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சிட்டிசன், ரேணிகுண்டா, காளை உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். நடிகர் அஜித்தை மட்டும் வைத்து ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய பல படங்களைத் தயாரித்துள்ளார். இவர் கடைசியாக சிம்பு – நெல்சன் கூட்டணியில் உருவாகி பின்பு கைவிடப்பட்ட வேட்டை மன்னன் படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் சமீபத்தில் வெளியான விலங்கு வெப் சீரிஸில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.