கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்,
ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரிலீஸ் ஆனது. சென்னையில் வெளியான திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது.

வேட்டையாடு விளையாடு படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கௌதம் வாசுதேவ் மேனன் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் கதையை நடிகர் கமலிடம் கூறியுள்ளேன், அவருக்கு பிடித்திருந்தது. துருவ நட்சத்திரம் வெளியீட்டுக்கு பின் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் பணிகளை துவங்க திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.